செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராக வாய்ப்பு!

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை தருவதாகப் பணம்பெற்று ஏமாற்றியதாகக் கூறி, செந்தில் பாலாஜி மீது தொடர்ந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் தொடர்பான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தது. அவற்றை நீக்க வேண்டும் என்று கோரி, செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சூர்யகாந்த், ஜெயமால்யா பாக்சி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கு விசாரணையில் இருக்கும்போது ஒருவர் அமைச்சராகக் கூடாது என சொல்ல முடியாது எனக் குறிப்பிட்டார்.

அதற்கு அவர் அமைச்சராக இருந்தால் சாட்சியங்களைக் கலைக்க நேரிடும் என்பதாலேயே, அமைச்சராக இல்லாததைக் கருத்தில்கொண்டு ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். வழக்கு விசாரணையே இன்னும் தொடங்காத நிலையில், எப்படி சாட்சிகளைக் கலைக்க முடியும் என கபில் சிபல் கூறினார்.

இதற்கு மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். வழக்கின் விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பல மனுக்களை செந்தில் பாலாஜி தரப்பு போட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, ஏன் வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்றக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்படி வழக்கை மாற்றினால், தமிழக நீதித்துறையின் மீது தவறான கருத்துக்கு வழிவகுத்துவிடும் என தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.

அப்போது டெல்லி மாற்றலாமா எனக் கருத்து மட்டுமே தெரிவித்ததாக கூறிய நீதிபதிகள், அமைச்சராக வேண்டும் என்றால், செந்தில் பாலாஜி தனி மனுவாகத் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் அனுமதியைப்பெற்று அமைச்சரவையில் இடம்பெறலாம் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Exit mobile version