வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோந்தா புயலாக வலுவடைந்துள்ளது. இதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளை கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு மோந்தா என பெயரிடப்பட்டு இருக்கிறது. மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் வட கிழக்கு திசையில், மோந்தா புயல் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு 600 கிலோ மீட்டர் தொலைவில் மோந்தா புயல் நிலை கொண்டுள்ளது.
இது தீவிர புயலாக மேலும் வலுப்பெற்று, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆந்திராவின் மசூலிப்பட்டினம் – கலிங்கபட்டினம் இடையே, காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மின்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.வங்க கடலில் புயல் உருவாகியுள்ள புயலை உணர்த்தும் வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9 துறைமுகங்களில், இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
















