தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குகிறது. இதனையொட்டி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து விலகியதையடுத்து வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையில் இன்று தொடங்குகிறது. இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீனவர்கள் 17-ம் தேதி வரை கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காயல்பட்டினம், காயாமொழி, தளவாய்புரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.