ஆப்ரேஷன் சிந்தூர் பதிலடியின் போது, பாகிஸ்தானுக்கு தூங்க முடியாத நிம்மதியற்ற இரவுகளை கொடுத்த பெருமை வி க்ராந்த் போர்க்கப்பலுக்கு உண்டு என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பாதுகாப்புப் படையினருடன், பிரதமர் மோடி தீபாவளி திருநாளை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், கோவாவிற்கும், சத்தீஸ்கர் மாநிலம் கன்வாருக்கும் இடையே, நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில், இந்த ஆண்டு பண்டிகையை கொண்டாடினார். கடற்படை வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய பிரதமர், பின்னர் அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, இந்திய கடற்படையின் துணிச்சலான வீரர்களுடன், தீபாவளியைக் கொண்டாடுவது தனது அதிர்ஷ்டம் என்றார்.
இந்த தருணம் மறக்கமுடியாதது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்திய கடற்படையின் செயல்பாடு பாராட்டுக்கு உரியது என்றும், பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்தார்.

















