2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச்
சட்டமுன்வடிவு திரும்பப் பெறப்பட்டு, மறு ஆய்வு செய்யப்படும் என்று, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
அதாவது கடந்த மாதம் 15-ம் தேதி, சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமுன்வடிவில், உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளதால், அதற்கேற்ப கூடுதல் உயர்கல்வி நிறுவனங்கள் தேவை என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு குறைந்தபட்ச நில அளவு 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவை என்பதை திருத்தி, மாநகராட்சியில் 25 ஏக்கர், நகராட்சி அல்லது பேரூராட்சியில் 35 ஏக்கர், பிற பகுதிகளில் 50 ஏக்கர் என்ற அளவில், சட்டமுன்வடிவில் குறைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய கல்லூரிகள் அடுத்த உயர்நிலையை எட்டுவதை மனதில் கொண்டு இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும், அதேசமயம், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு இதற்கான அனுமதி அளிக்கவில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.
எனினும் இது குறித்து சில சட்டமன்ற உறுப்பினர்கள், சமூகஊடகங்கள் மற்றும் பொது வெளியிலும் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், இந்தச் சட்ட முன்வடிவு குறித்து கல்வியாளர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், கல்வித்துறை அலுவலர்களின் கருத்துக்களைப் பெற்று, உரிய மேல் நடவடிக்கை தொடரலாம் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதால், இந்தச் சட்டமுன்வடிவு திரும்பப் பெறப்பட்டு உரிய மறு ஆய்வு செய்யப்படும் என்று, அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

















