தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில், தசரா திருவிழாவையொட்டி நள்ளிரவில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மைசூருக்கு அடுத்தபடியாக, குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, குரங்கு, அம்மன், சிவன், பார்வதி உள்ளிட்ட பல்வேறு வேடமனிந்து ஆடிப்பாடி தனியாகவும், தசரா குழுக்களாகவும் ஊர் ஊராக சென்று காணிக்கை பெற்று கோவிலில் செலுத்துவது இக்கோவிலின் தனிசிறப்பாகும்.
விழாவின் இறுதிநாளான நேற்று, பக்தர்கள் காணிக்கைகளை கோவிலில் பக்தியுடன் செலுத்தினர். இதே போல, காளி வேடம் அணிந்த பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்து ஆடி காணிக்கை செலுத்திய பின்னர் கோவில் கடற்கரையில் சென்று அக்னி சட்டியை இறக்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளி மகிசாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.
இதையொட்டி இரவு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் மஹிஷா சூரமர்தினி கோலத்தில் கடற்கரைக்கு எழுந்தருளினார்.
பக்தர்கள் வெள்ளத்தில் கடற்கரைக்கு வந்த அம்மன் முதலில் தன் முகத்துடன் இருந்த மகிஷாசூரனை வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாக உருவம் மாறிய மகிசாசூரனை வதம் செய்தார். தொடர்ந்து எருமை உருவம் பெற்றவனையும் வதம் செய்தார். முடிவில், சேவல் உருவமாக மாறிய மகிசாசூரனையும் அம்மன் வதம் செய்தார். இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை சுமார் 15 லட்சம் பக்தர்கள் கண்டு களித்தனர்.
