ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 89 ஆயிரத்து 600 ரூபாய் என, புதிய உச்சம் பெற்றிருக்கிறது. ஒரு வாரத்தில் மட்டும், சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்திருக்கிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த 1-ம் தேதி தங்கம் விலை, ஒரு சவரன் 87 ஆயிரத்து 600 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதன்பிறகும், தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது. அதாவது கடந்த 10 மாதங்களில் மட்டும், சவரனுக்கு 32 ஆயிரம் ரூபாய் அதிகரித்திருக்கிறது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம், 11 ஆயிரத்து 200 ரூபாயாகவும், ஒரு சவரன் 89 ஆயிரத்து 600 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளியின் விலையில், இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் 167 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.