கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியீட்டுள்ள அறிக்கையில் கடந்த ஒருவாரமாக பெய்த மழையால் பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தி.மு.க. அரசு பருவமழை தொடங்கும் முன்பே வாய்க்கால்கள் மற்றும் வரத்துக் கால்வாய்களை தூர் வாராததால் ஒவ்வொரு வயல்வெளியும் ஏரியைப் போலவும் கடல் போலவும் காட்சி அளிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்ததைப் பார்த்து வேளாண் பெருங்குடி மக்கள் மனவேதனை அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரசு அதிகாரிகள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும் மற்ற பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
