பீகார் மாநில சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக வரும் நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில், தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும் அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், தமிழகத்தில் ஏற்கனவே காலியாக இருக்கும் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்துவததில்லை என முடிவு செய்துள்ளது.
பீகார் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம், வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பு சட்டசபைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இரு கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டார்.
அதன்படி, நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப் பதிவு நடத்தப்படும். மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 121 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும், மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையத் தலைவர் தெரிவித்தார்.
முதல்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இம்மாதம் 10 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் இம்மாதம் 13 ஆம் தேதியும் தொடங்கும். இருகட்டத் தேர்தல்களுக்குமான புதிய வேட்பாளர்கள் பட்டியல்கள், இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்போது வெளியிடப்படும் என ஞானேஷ்குமார் கூறினார். இரு கட்டத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகள், நவம்பர் 14 ஆம் தேதி எண்ணப்படும்.