திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை – அடையாறில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை அடையாறில் திமுக பிரமுகர், ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூர் அவ்வை நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கவுதம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கொட்டிவாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும், திமுக பிரமுகமான குணசேகரன், அவரது நண்பர்கள் கமலேஷ், நித்தியானந்த், பார்த்திபன், சதீஷ் ராஜ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்துள்ள குணசேகரன், திங்கள்கிழமை மாலை அடையாறியல் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கும்பல், குணசேகரனை சுற்றி வளைத்து வெட்டியது. உயிர் தப்பிக்க, அடையாறு பிரதான சாலையில் ஓடிய அவரை, அந்த கும்பல் விரட்டிச் சென்று வெட்டிச் சாய்தது. கொல்லப்பட்ட குணசேகரன் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version