கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கரூரில் கடந்த 27-ம் தேதியன்று விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கரூர், நாமக்கல் மாவட்ட த.வெ.க செயலாளர்களைக் கைது செய்துள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஆனந்த். நிர்மல் குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனித்தனியே தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமீன் கோரி, மீண்டும் மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.