தீபாவளி கொண்டாட்டம் – நிற்க இடமில்லாமல் நிரம்பிய பேருந்து ரயில் நிலையங்கள்

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தீபாவளிப் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில்நிலையங்களில் இருந்தும், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்தும் ஏராளமான பயணிகள் ரயில்களில் ஏறுவதற்காக காத்திருந்தனர். முன்பதிவு செய்த பயணிகளும், முன்பதிவில்லா ரயில்களில் செல்வோரும் ஒரே நேரத்தில் ரயில் நிலையங்களில் குவிந்து வருவதால், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கோவை ரயில் நிலையத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக மக்கள் குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வடமாநிலங்களில் இருந்து, கோவை மற்றும் சுற்று வட்டாரங்களில் தங்கி பணியாற்றும் தொழிலாளர்களும், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக ரயில்நிலையத்தில் குவிந்துள்ளனர். மக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் தங்களின் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி, ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகிறார்கள்.

சென்னை கோயம்பேடு, எழும்பூர், தாம்பரம், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வோர் குவிந்ததால் அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அரசுப் பேருந்துகளுடன் கூடுதலாக ஆம்னிப் பேருந்து சேவைகளும் இயக்கப்பட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Exit mobile version