மகளிர் உரிமைத்தொகை பெறும் தாய்மார்கள், ஆயிரம் ரூபாய்க்கு ஏமாந்து விட்டதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமிதான், பிஜேபி-யுடன் கூட்டணி வைத்து ஏமாந்து போய்விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் அவர் பேசினார்.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மகளிர் உரிமைத் தொகை பெறும் தாய்மார்களை ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாந்து விட்டதாகக் தெரிவிப்பதை சுட்டிக்காட்டி, மக்கள் ஏமாறவில்லை, பிஜேபி-யுடன் கூட்டணி வைத்ததன் மூலம் இபிஎஸ் தான் ஏமாந்து போயுள்ளார் என்றார்.
“உங்களுடன் ஸ்டாலின்” என்ற மகத்தானதொரு திட்டத்தை சிதம்பரத்தில் தாம் தொடங்கி வைத்திருப்பதாகவும், அதைக் கண்டு பொறுக்க முடியாமல், அந்த திட்டத்தை எடப்பாடி பழனிசாமி குறைகூறுவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற, ரெய்டில் இருந்து தப்பிக்க, டெல்லிக்குச் சென்று அமித் ஷா வீட்டுக் கதவைத் தட்டி, அதிமுக தொண்டர்களை அடகு வைத்ததாக கூறினார்.
2021-ம் ஆண்டு தேர்தலில் தோல்விக்குக் காரணம் பிஜேபிதான் என்று சொல்லிவிட்டு, மீண்டும் அதே கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருப்பதாக குறைகூறினார். 2019-ம் ஆண்டிலிருந்து பத்து தோல்வி பழனிசாமி, அடுத்தாண்டு தேர்தலிலும் தோல்வியடைவார் என்று விமர்சித்து பேசினார்.