நானே முதல்வர் அதில் மாற்றமில்லை-சித்தராமையா

கர்நாடக மாநிலத்தில் தனது தலைமையிலேயே ஆட்சி தொடரும், 5 ஆண்டுகளை தாம் நிறைவு செய்வேன் என்றும் முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் தற்போது முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள டி.கே.சிவகுமாரும் பதவி வகித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளராக பெங்களுரு வந்த ரன்தீர் சுர்ஜேவாலா, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால், சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்றிவிட்டு, சிவக்குமார் முதல்வராக பொறுப்பேற்பார் என்று தகவல்கள் வெளியாகின. என்றாலும், தலைமை மாற்றத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை என்று சுர்ஜேவாலா தெரிவித்தார். இதை டி.கே.சிவக்குமாரும், சித்தராமையா தான் முதலமைச்சராக தொடர்வார் என்று அறிவித்தார்.

கர்நாடக அரசியலில் பரபரப்பு நீடித்த சூழலில், டி.கே.சிவக்குமாரின் தீவிர ஆதரவாளரான இக்பால் ஹூசேன், சிவக்குமாரை முதலமைச்சராக்க வேண்டும் என்று கட்சியின் மேலிடப் பார்வையாளரிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 100 பேர் வலியுறுத்தி இருப்பதாகத் தெரிவித்தார். இக்பாலின் இந்தப் பேட்டி மீண்டும் பேசுபொருளானது. இதுபற்றி அவரிடம் விளக்கம் கோரியிருப்பதாக டி.கே.சிவக்குமார் கூறியிருந்தார்.

இதற்கிடையே, கர்நாடக அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் பெங்களுருவில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, தான் 5 ஆண்டுகாலம் முதல்வர் பதவியில் நீடிப்பேன் என்றும், தலைமையில் மாற்றம் ஏதும் செய்யப்படாது, அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் உறுதிபட தெரிவித்தார்.

Exit mobile version