இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய மிகப்பெரிய அளவிலான நிலப்பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 8ம் வட்டாரம் மந்துவில் உள்ள கிராமத்தில், போரின்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் பதுங்குழியில் தங்கியிருந்தனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த தனியார் இடத்தில் இரண்டு ஏக்கர் வரையிலான இடத்தில் விடுதலைப்புலிகளின் முகாமாக காணப்பட்டுள்ளது.
போர் கால கட்டத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக பெரிய அளவில் நிலக்கீழ் பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளது. நிலத்தின் கீழ் சுமார் 20 அடி ஆழத்தில் இந்த நிலக்கீழ் பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பிலான வழக்கு தொடரப்பட்டு பதுங்குகுழியில் தோண்டும் நடவடிக்கைக்காக கிராம அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அந்த பகுதி கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.