எடப்பாடி பழனிசாமி விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல. பிஜேபியின் பாசிச ரத்தக் கம்பளம் என்பதை திமுக தோழமை கட்சிகளும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பயணம் மேற்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக்கூத்துகளை அரங்கேற்றி நெட்டிசன்களுக்கு ‘ட்ரோல் மெட்டீரியல்’ ஆகிக் கொண்டிருக்கிறார் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை பயணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் அக்கட்சி இருக்கிறதா? இல்லையா ? என்று பேசியவர், சிதம்பரத்தில் வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூட்டணியில் சேர அழைப்பு விடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், கோவையில் பேசியவரும், சிதம்பரத்தில் பேசியவரும் ஒரே ஆளா? என்று வாக்காளர்கள் மண்டையை போட்டு குழப்பி கொண்டிருப்பதாகவும் கே.என்.நேரு கூறியுள்ளார். திமுக கூட்டணி கட்சிகளை விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி, மூச்சுக்கு முப்பது தடவை கூட்டணி ஆட்சி என சொல்லும் அமித்ஷாவிற்கு பதிலடி தர முடிகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.