சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி, டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், இன்று அதிகாலை திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடக்கும்போது, தண்டவாளத்தை விட்டு விலகியது.
அப்போது, ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்ததால், உடனடியாக தீப்பிடித்துக் கொண்டன. மொத்தம் 52 வேகன்கள் ரயலில் எடுத்து செல்லப்பட்டது. இதில், 12 வேகன்கள் தீப்பிடித்து எரிந்தது. இதனால், அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.

திருவள்ளூர் ரயில் நிலையத்தைச் சுற்றிய 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு, கரும்புகை சூழ்ந்திருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 மணிநேரத்திற்கும் மேலாக பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மட்டுமல்லாது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் இருந்தும், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணிகளை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதீப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே, விபத்து நடந்த இடத்தை, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உடனடி சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.