நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட எம்பிகள் அனைவரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசின் வஞ்சகத்தை, நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் வரி வருவாயில், மாநிலங்களுக்கு 50 விழுக்காடு வரி பகிர்வு, மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களுக்கு, மாநில அரசின் பங்கு தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏற்பட்டு வரும் நிதி நெருக்கடி ஆகியவற்றை, நாடாளுமன்றத்தில் அழுத்தமாக எடுத்துரைப்பது என்றும், இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் நிதியுரிமை, மொழியுரிமை, கல்வி உரிமை ஆகியவற்றுடன், இந்தியாவின் கூட்டாட்சி உரிமை உள்ளிட்ட அனைத்திற்காகவும், மழைக்கால கூட்டத்தொடரில், திமுக எம்பி-க்கள் உரத்த குரல் எழுப்புவது என்றும், கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.