திருச்செந்தூரில், அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நெஞ்சுவலி ஏற்பட்ட போதும், பேருந்தில் இருந்த பயணிகளை காப்பாற்ற,துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து உடன்குடிக்கு அரசுப்பேருந்து ஒன்று 80க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றது. பேருந்தை, குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த அல்டாப் என்பவர் ஓட்டிச் சென்றார். காமராஜர் சிலை அருகே சென்ற போது, ஓட்டுநர் அல்டாப்பிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இருப்பினும் சுதாரித்துக்கொண்ட அவர், பேருந்தை நிறுத்த கடுமையாக முயற்சித்துள்ளார், பின்னர் சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதி பேருந்தை நிறுத்தினார். இதனால் பேருந்தில் இருந்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். ஆனால் பேருந்தை இயக்கிய அல்டாப் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்து மோதியதில், சாலை ஓரம் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரும் காயமடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருச்செந்தூர் தாலுகா போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தினங்களுக்கு முன் தான் சென்னையில் மாநகர பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கும்போதே மாரடைப்பால் மரணமடைந்தார்.