கோவையில் ஒன்றைரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி கிராமத்தில், தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், நிதி மேலாண்மை முறையாக இல்லை. எனவே, இந்த கோவிலை அறநிலையத்துறை, தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என, கோவில் நிர்வாகிகளில் ஒருவரான சுரேஷ்குமார் மனு அளித்திருந்தார்.
அவரது மனுவை பரிசீலனை செய்த அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா, 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. பின்னர் பேரம் பேசியதில், லஞ்ச பணம் ஒன்றரை லட்சமாக குறைக்கப்பட்டது.
எனினும், லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை, இந்திராவிடம் சுரேஷ்குமார் வழங்கினார்.
அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.