படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங் நினைவிடத்தில், தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். அங்கு அவரது மனைவி பொற்கொடி தொடங்கிய, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்துவைத்தார்.
முன்பகை காரணமாக, கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பொத்தூரில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் ஆம்ஸ்ராங்கின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் தாயார், கமல்தாய் ஆகியோர் இன்று திறந்துவைத்தனர். பின்னர் புத்தமத வழக்கப்படி, நினைவிடத்தில் அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து தாம் புதிதாக தொடங்கியுள்ள, “தமிழ் மாநில பகுஜன் சமாஜ்” என்ற கட்சியின் பெயரை அறிவித்ததுடன், கட்சி கொடியை அறிமுகம் செய்யும் வகையில், 50 அடி உயர கம்பத்தில் அதை ஏற்றிவைத்தார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஆம்ஸ்ராங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். தமிழக பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலரும் மலர் வளையம் வைத்து, ஆம்ஸ்டிராங்கிற்கு மரியாதை செலுத்தினார்கள்.