ரயில் பயண கட்டணங்கள் வரும் 1-ம் தேதி முதல் உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வோருக்கு 500 கிலோ மீட்டர் வரை கட்டண உயர்வு இல்லை. அதற்கு மேல் பயணிப்போருக்கு மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வு இருக்கும். ‘ஏசி’ அல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு, 500 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலான பயணத்தில், ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கணக்கிட்டு, கட்டணம் உயர்த்தப்படுகிறது.
உதாரணத்துக்கு, ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம், முன்னர் இருந்ததைவிட 10 ரூபாய் அதிகரிக்கும். அதேபோல், ‘ஏசி’ பெட்டிகளில் பயணிப்போருக்கு, 500 கிலோ மீட்டருக்கு மேல், ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளில் கட்டண உயர்வு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.