தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் இன்று வெளியிட்டார். பொதுக்கலந்தாய்வு ஜூலை 14 ஆம் தேதி தொடங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை அரசால் கலந்தாய்வின் மூலம் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சென்னையில் இன்று வெளியிட்டார்.
அதன்படி, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, பொறியியல் படிப்புகளில் சேர, சுமார் 41 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார். பொதுக்கலந்தாய்வுக்கான தரவரிசையில் மொத்தம் 145 பேர் 200க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண்கள் எடுத்திருப்பதாக அமைச்சர் கூறினார்.
அதில், காஞ்சிபுரம் மாணவி ஜே.சாகஸ்ரா முதலிடத்தையும், நாமக்கல் மாணவி எஸ்.கார்த்திகா இரண்டாம் இடத்தையும், அரியலூர் மாணவன் அமலன் ஆண்டோ மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கிறார்கள்.
அதேபோல, அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீட்டிலும் இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில், சுமார் 15 ஆயிரம் பேர் கூடுதலாக இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்ப¤ட்டார். மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 7 ஆம் தேதி தொடங்குகிறது. 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கும், ஜூலை 9 முதல் 11 ஆம் தேதி வரை பொதுப்பிரிவில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள், மற்றும் விளையாட்டுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெறும். பொறியியல் கல்லூரிகளின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும், கடந்த ஆண்டு வசூலித்த கட்டணமே நீடிக்கும் என்றும் அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.
