சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய எம்.எல்.ஏ ஜெகன்மூர்த்தி, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என, நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டார்.
எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியை கடிந்து கொண்ட நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி, திருவாலங்காடு காவல் நிலையத்தில், ஜெகன்மூர்த்தி, கடந்த வாரம் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில், முன்ஜாமின் கோரிய வழக்கு, இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிறுவன் கடத்தல் வழக்கில் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி தான், முக்கிய குற்றவாளி என வாதிட்ட காவல்துறை, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக புகார் தெரிவித்தனர். ஜெகன்மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்பதால், அவருக்கு முன்ஜாமின் வழங்க கூடாது என்றும் காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
