திமுக-வினரின் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கத்தால், உள்ளாட்சி அமைப்புகள் சீரழிந்து, மக்களின் நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கி இருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறைகூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டணம், கழிவுநீர் கட்டணம், தொழில்வரி என அனைத்தையும் திமுக அரசு உயர்த்தியது. உள்ளாட்சியின் நிதி நிலமையை உயர்த்தியதாகக் கூறும் திமுக அரசு, அதற்கு ஏற்ப, சாலை வசதியையோ, மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை என்று குறைகூறியுள்ளார்.
உள்ளாட்சிப் பதவிகள் திமுக-வினரின் குடும்ப உறுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, கமிஷன், கலக்ஷன், கரப்ஷன் தங்கு தடையின்றி நடைபெறுவதால், திமுக மேயர்கள், நகராட்சித் தலைவர்களுக்கு எதிராக, அவர்களது கட்சிக்காரர்களே ஊழல் புகார் தெரிவித்து, எதிர்க்கும் சூழல் உருவாகியுள்ளதாக இபிஎஸ் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் வெற்று விளம்பரத்தை, மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், தமிழக நலனைக் கவனிக்காமல், குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் திமுக அரசு ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளாட்சி மன்றங்கள் மக்களின் வளர்ச்சிக்கு உருவாக்கப்பட்டவை, குடும்ப ஆதிக்கத்திற்கு அல்ல என்பதை, தமிழக மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலில், ஸ்டாலினுக்கு உணர்த்த தயாராகி விட்டார்கள்.
அதிமுக ஆட்சி அமையும்போது, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.