“விஜய்யை பார்க்க 10 ஆயிரம் பேர் தான் வருவார்கள் என்று எப்படி கணக்கிட்டீர்கள் ?” – தவெக நிர்வாகிகளிடம் நீதிபதி கேள்வி

கரூரில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் இன்று கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, “விஜய்யை பார்க்க வெறும் 10 ஆயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என்று நீங்கள் எப்படி கூறினீர்கள்? மைதானம் போன்ற பெரிய இடத்தை ஏன் கேட்கவில்லை?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், அதிக கூட்டம் வரும் என விஜய்க்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டதா என்றும் கேட்டறிந்தார்.

இதற்கிடையில், அரசு தரப்பு வழக்கறிஞர் தண்டபாணி, “கரூர் சம்பவத்தில் அனைத்து நடைமுறைகளையும் போலீசார் பின்பற்றினர். ஆனால் தவெக நிர்வாகிகள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை. சிகிச்சை பெற்று வரும் சிலரின் உயிரிழப்பும் ஏற்படக்கூடும் என்பதால், கூடுதல் கைது நடவடிக்கைகள் தேவைப்படும்” என வாதாடினார்.

மறுபுறம், தவெக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “விஜய்யின் பிரசாரத்துக்கான கூட்டம் தானாகவே வந்தது. யாரையும் வண்டியில் ஏற்றி கொண்டு வரவில்லை. பேருந்து நிலையம், லைட்ஹவுஸ், உழவர் சந்தை பகுதிகளை மேடைக்காக கேட்டோம். ஆனால் போலீசார் அனுமதி வழங்காமல் வேலுசாமிபுரம் பகுதியையே ஒதுக்கியனர். அங்கு குறுகிய இடம் தான் இருந்தது. அதனால் முதலில் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்ற கணக்கில் தான் அனுமதி கோரியிருந்தோம்” என விளக்கம் அளித்தார்.

இதற்குப் பதிலளித்த நீதிபதி, “நீங்கள் கேட்ட 3 இடங்களுமே போதுமான பரப்பளவில்லாதவை. காலாண்டு விடுமுறை, வார இறுதி நாட்களில் விஜய்யின் கூட்டம் குறைவாக இருக்கும் என எவ்வாறு கணித்தீர்கள்?” என சந்தேகம் எழுப்பினார்.

Exit mobile version