“ஒரே மாதத்தில் 6 கோடி பேரை எப்படி சரி பார்க்க முடியும் ?” – சீமான் எச்சரிக்கை

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த திடீர் நடவடிக்கையால் மாநிலத்தில் குறைந்தது ஒரு கோடி பேர் வாக்குரிமையை இழக்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் எச்சரித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் ஆணையம் ஒரு மாத காலத்துக்குள் தீவிர திருத்த பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளது. 6 கோடியே அதிகமான வாக்காளர்கள் கொண்ட மாநிலத்தில் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள் தொடர்ந்து கூறி வருகின்றன. அதிமுக, பாஜக கூட்டணியைத் தவிர, பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இந்த எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதையடுத்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வட்டாரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான், தீவிர திருத்தத்தை “அவசர அவசரமாக கொண்டு வந்த முடிவு” என்று விமர்சித்தார்.

“இந்த நாட்டில் மக்கள் தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதே மரபு. ஆனால் இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்போர்கள் தங்களுக்கு சாதகமான வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கும் நிலை வந்துவிட்டது. ஒரே மாதத்தில் 6 கோடி பேரை சரிபார்ப்பது எப்படி சாத்தியம்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், கடந்த இடைத்தேர்தல் அனுபவங்களை நினைவு கூர்ந்த அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுக்கள் பற்றி தேர்தல் ஆணையம் எதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இப்போது பொய் வாக்காளர்களை பிடிக்கிறோம் என்கிறார்கள். இது மக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் முயற்சி” என்றார்.

தாமும் வாக்குரிமை இழக்க நேரிடும் நிலை இருப்பதாக சீமான் குறிப்பிட்டார். “நான் ஆலப்பாக்கத்தில் இருந்தேன்; அங்கேயே எனது ஓட்டு. இப்போது நீலாங்கரைக்கு மாற்றி வந்துள்ளேன். பிஎல்ஓ அதிகாரி பழைய முகவரியில் தேடி என்னை காணவில்லை என்றால் என்னுடைய பெயரே நீக்கப்படலாம். இது ஆயிரக்கணக்கானோருக்கும் நடக்கக் கூடும்” என்று அவர் தெரிவித்தார்.

பெரும்பாக்கம் தொகுதியிலேயே 27 ஆயிரம் பேர் வாக்குரிமை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், பீகாரில் நடந்தது போல இங்கும் பெரிய அளவில் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்றும் சீமான் எச்சரித்தார்.

ஆதார் இணைப்பு – நீக்கம் உள்ளிட்ட நடைமுறைகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை துறைகளில் போல இன்றும் பொதுமக்களுக்கு அனுகூலமான விதிமுறைகள் இல்லையெனவும் அவர் கூறினார்.

Exit mobile version