தொப்பூர் கணவாயில் கோர விபத்து: ஆறு வாகனங்கள் மீது லாரி மோதி 4 பேர் பலி

பெங்களூரு – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளின் மையப்புள்ளியாகத் திகழும் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே, கட்டுப்பாட்டை இழந்த லாரி அடுத்தடுத்து ஆறு வாகனங்கள் மீது மோதிய கோர விபத்தில் பெண் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும், நீண்ட நேரப் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் நடுக்காரப்பட்டியைச் சேர்ந்த முனியப்பன் (46) என்பவர் ஓட்டி வந்த லாரி, மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கோழித் தீவன மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்தது., தொப்பூர் கணவாயை அடுத்த போலீஸ் குடியிருப்புப் பகுதியை லாரி கடந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. முன்னால் சென்ற மூன்று கன்டெய்னர் லாரிகள் மீது மின்னல் வேகத்தில் மோதியது. இந்த மோதலின் வீரியத்தில், பார்சல் ஏற்றிச் சென்ற ஒரு கன்டெய்னர் லாரி, சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த மாருதி மற்றும் ஃபோர்டு ஆகிய இரு கார்களின் மீது தலைகுப்புறக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஃபோர்டு கார், பாரம் ஏற்றிய லாரியின் அடியில் சிக்கி முழுமையாக நசுங்கியது. அதில் பயணம் செய்த சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் (30) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த பிரபாகரன் (42) மற்றும் பாலகிருஷ்ணன் (47) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிப் படுகாயமடைந்தனர். இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திய கோழித் தீவன லாரி தொடர்ந்து சீறிப்பாய்ந்து, முன்னால் சென்று கொண்டிருந்த ஹோண்டா டியோ ஸ்கூட்டர் மீதும் மோதி, பின்னர் சாலைத் தடுப்பில் (Median) மோதி நின்றது.

இந்தத் தொடர் விபத்தில், ஸ்கூட்டரில் சென்ற தர்மபுரி மாதேமங்கலத்தைச் சேர்ந்த அருணகிரி (38), அவரது அக்கா கலையரசி (40) மற்றும் தீவன லாரி ஓட்டுநர் முனியப்பன் (46) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த மாற்று ஓட்டுநர் வீரன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற கார்களில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.

சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுப் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட ஆட்சியர் சதீஷ், இப்பகுதியில் விபத்துகளைத் தடுக்கத் தேவையான நிரந்தரக் கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொப்பூர் கணவாய் பகுதியில் தொடரும் இத்தகைய கோர விபத்துகள், வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version