மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக சீர்காழியில் ரூ.89.50லட்சம் மதிப்பீட்டில் புதியகால்நடை மருத்துவமனை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.89.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருத்துவமனை கட்டடத்தினை திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்.

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், ரூ.89.50 இலட்சம் மதிப்பீட்டில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த கால்நடை மருத்துவமனை கட்டடம் 2370.43சதுர அடி பரப்பளவில் (தரை தளம் மட்டும்) கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறை, மருத்துவர் அறை, சேமிப்பு அறை, பதிவு அறை மற்றும் மண்குழி ஆகியவை அமைந்துள்ளன. இந்த கால்நடை மருத்துவமனை சீர்காழி பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தொடர்ந்து, சீர்காழி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு மருந்தகம், இரத்த பரிசோதனை பிரிவு, நோயாளிகள் பதிவேடு, மருத்துவர்கள், செவிலியர்கள் வருகைப் பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்கள். பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவசேவைகள் குறித்தும் மருத்துவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
பின்னர், வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மருத்துவ வசதிகள் தொடர்பாக மருத்துவரிடம் கேட்டறிந்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி;, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் மரு.சுகுமார் அவர்கள், நகர்மன்ற துணை தலைவர் சுப்புராயன் பொதுப்பணித்துறை (கட்டிடம் மற்றும் பராமரிப்பு பணிகள்) செயற்பொறியாளர் கவிதா , கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் மரு.அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version