உயர்ரக கஞ்சா விற்பனை – சினிமா உதவி இயக்குநர் உட்பட 3 பேர் கைது !

சென்னை : மெட்ராஸ் மாநகரில் உயர்நிலை கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, சினிமா உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு, ஏழுகிணறு பெரியண்ணா தெருவில் விலை உயர்ந்த “ஓஜி” வகை கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு, தண்டையார்பேட்டை, ஏழுகிணறு, விம்கோ நகர் பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனையை மேற்கொண்டனர்.

இதில், தண்டையார்பேட்டைச் சேர்ந்த ஸ்ரீ பிரேம்குமார் (32), ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் சந்தோஷ் (34), விம்கோ நகர் பகுதியைச் சேர்ந்த ராஜன் (36) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ₹15 லட்சம் ரொக்கம் மற்றும் ₹10 லட்சம் மதிப்புள்ள 750 கிராம் உயர்ரக ஓஜி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்த விசாரணையில், மூவரில் முக்கியத் தலையாக இருந்த பிரேம்குமார், நடிகர் விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் மலேசியாவில் தங்கியிருக்கும் அஸ்லாம் என்ற நபரின் வழியாகவே இந்த கஞ்சா சென்னை வருவதாகவும், அதை சினிமா மற்றும் கால் சென்டர் வட்டாரங்களில் பிரேம்குமார் விற்பனை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பிரேம்குமாருக்கு கால் சென்டர் ஊழியராக பணியாற்றும் அலெக்ஸ் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் ராஜன் உதவியாக இருந்தனர். தற்போது, மலேசியாவில் தலைமறைவாக உள்ள அஸ்லாம் மற்றும் அகஸ்டின் என்பவரை தேடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இவ்வகை போதைப் பொருள் சம்பவங்கள் கடந்த காலங்களில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் தொடர்பான வழக்குகளுக்குப் பின் மீண்டும் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version