சென்னையில் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தியும், அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில், ஜூலை 16 முதல் தனியார் நிறுவனத்தின் மூலம் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், தற்காலிக தூய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு, அதிமுக, காங்கிரஸ், நாம்தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் அமைப்புகளும், பல சினிமா பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாநகராட்சி தரப்பில், தனியார் நிறுவன பணியில் பணி பாதுகாப்பு மற்றும் பல்வேறு சலுகைகள் இருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது தலைமை நீதிபதி தெரிவித்தது :

ரிப்பன் பில்டிங் முன்பு நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனுமதியின்றி நடைபெறும் போராட்டங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் போராட்டம் நடத்தலாம்.

சட்டப்படி அனைவரையும் அப்புறப்படுத்த வேண்டும்.

இதன் பேரில், அனுமதியற்ற இடங்களில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது எனவும், தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

Exit mobile version