தவெக கட்சிக்கு பலத்த அடி.. புதிய அரசியல் வழிகாட்டுதலையே கொண்டு வாங்க.. உயர் நீதிமன்றம் அறிவுரை

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பொதுக்கூட்டங்களில் பொதுச் சொத்துகள் சேதமடைந்ததை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல்கள் உருவாகாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளிடமிருந்து பாதுகாப்பு வைப்புத்தொகை வசூலிக்க தேவையான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வகுக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இந்த வைப்புத்தொகை, கூட்டங்களின் போது பொதுச் சொத்துகள் அல்லது தனியார் சொத்துகளுக்கு ஏற்படும் சேதத்துக்கு ஈடாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், ஊர்வலங்கள் மற்றும் பெரிய பொதுக்கூட்டங்களை நடத்தும் அமைப்புகளுக்கும் இத்தகைய நிபந்தனைகள் பொருந்தும் என்றும் நீதிபதி என். சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், 1992ஆம் ஆண்டு சொத்து சேதம் தடுப்பு சட்டமும், 1994ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தமும் சரியாக அமல்படுத்தப்படவில்லை எனவும், அரசியல் கட்சிகள் அல்லது அமைப்புகள் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் ஏற்பட்ட சேதங்களுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக இழப்பீடு கிடைக்காதது குறித்து கவலை தெரிவித்தார்.

தவெக மனு விசாரணையின் போது, இந்தக் கருத்துகளை நீதிமன்றம் தெரிவித்தது. தனது பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை பாகுபாடு காட்டுகிறது எனக் கூறி, தவெக கட்சி மனு தாக்கல் செய்திருந்தது. திருச்சியில் செப்டம்பர் 13ஆம் தேதி நடந்த கூட்டத்திற்கு காவல்துறை 23 நிபந்தனைகள் விதித்ததாக மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி நீதிமன்றத்தில் வாதிட்டார். அதில் “கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளக்கூடாது” என்ற நிபந்தனையும் இருந்தது என அவர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, தவெக கட்சி மாநிலத்தில் வேகமாக வளர்ந்து வரும் வலுவான ஜனநாயக சக்தி எனவும், அதன் அடிப்படை கொள்கைகள் சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயக மதிப்புகள் மற்றும் இருமொழிக் கொள்கை என்பன எனவும், துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 24க்குள் தமிழக அரசு இதுகுறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கூடுதல் அரசு வழக்கறிஞர் இ. ராஜ் திலக்கிடம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version