திருப்பதி ரயிலில் நடந்த பாலியல் தொல்லை மற்றும் கொலை முயற்சியில், கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிய ஹேமராஜூ என்பவருக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் மரணம் வரை கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கிடைத்த தகவலின்படி, ஆந்திராவைச் சேர்ந்த 35 வயதான கர்ப்பிணி ஒருவர் கோவையில் இருந்து திருப்பதி நோக்கி பயணித்தார். ரயில் ஜோலார்பேட்டை பகுதியில் சென்றபோது, கழிப்பறைக்குச் சென்ற பெண்ணை, கே.வி. குப்பத்தைச் சேர்ந்த ஹேமராஜூ என்பவன் பின்தொடர்ந்து பாலியல் தொல்லை செய்துள்ளார்.
பெண் தன்னைக் காப்பாற்றக்கூசல் எழுப்பிய நிலையில், ஹேமராஜூ அவர் மீது தாக்குதல் மேற்கொண்டு, ரயிலிலிருந்து தள்ளியுள்ளான். இதில், பெணுக்கு தலையில் பலத்த காயமும், கை கால் முறிவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஹேமராஜுவை கைது செய்தனர். 8 கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கிடையிலிருந்தது.
பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில், ஹேமராஜூ குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து, தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது.
தீர்ப்பு விவரம் :
ஹேமராஜூவுக்கு மரணம்வரை கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
சிறையில் எந்தவித சலுகைகளும் வழங்கக்கூடாது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசு ஏற்க வேண்டும்.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
பெண்ணுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு – இதில் ரயில்வே துறை ரூ.50 லட்சமும், தமிழ்நாடு அரசு ரூ.50 லட்சமும் வழங்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது