பொள்ளாச்சி, ஆனைமலை, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை கடும் வெயில் நிலவி வரும். அதன் பின்னர் கோடை மழை, பின்னர் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் தாக்கம் காட்டும். குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலமான கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மட்டுமே அதிக பனிப்பொழிவு காணப்படும்.
ஆனால் இந்நாடாண்டில், வழக்கத்தை விட முன்பாகவே பனிப்பொழிவு துவங்கியுள்ளது. கார்த்திகை மாதம் தொடங்குவதற்கு முன்பே, கடந்த வாரம் முதல் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான ஆழியார் மற்றும் அதன் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மாலை நேரத்திலிருந்து மறுநாள் மதியம் வரை நீடிக்கும் அடர் பனி படர்ந்து வருகிறது.
நேற்று நாளெல்லாம் ஆழியார் அணை பகுதிச் சுற்றிலும் மேக மூட்டத்தைப் போல அடர்த்தியான பனி மூடி இருந்தது. இதனால் வால்பாறை மலை முழுவதும் பனிமூட்டத்தில் மறைந்திருப்பது போல காட்சியளித்தது. இதனை கண்ணுற்ற சுற்றுலா பயணிகள் ஆழியார் அணை பகுதியில் நின்று பனி மூட்டக் காட்சியை பிரம்மிப்புடன் ரசித்து புகைப்படமெடுத்து சென்றனர். உள்ளூர் மக்கள் தெரிவித்ததாவது,
“வழக்கமாக இந்த அளவிலான பனி கார்த்திகை, மார்கழி மாதங்களில் தான் இருக்கும். ஆனால் இவ்வாண்டு அக்டோபர் இறுதி, நவம்பர் முதலிலேயே பனி படர்வது புதுமை” என்றும் தெரிவித்தனர்.
மேற்குத்தொடர்ச்சி மலையின் இந்த எதிர்பாராத பனிப்பொழிவு, அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















