தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் வெப்பச்சலனம் காரணமாக, நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, சிவகிரி அருகே உள்ள ராமநாதபுரம் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கியுள்ளது. தெருக்களில் முழங்கால் அளவிற்கு நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மழையின் தாக்கம் காரணமாக ராமநாதபுரம் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால், சிறுதானியங்கள் மற்றும் காய்கறிப் பயிர்கள் சேதமடையும் சூழல் உருவாகியுள்ளது. நேற்று பெய்த மழையினால் இப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள நீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்; குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளம் மேடு தெரியாமல் விபத்துக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரூ முறையும் பலத்த மழை பெய்யும் போது ராமநாதபுரம் பகுதியில் இது போன்ற நீர் தேங்கும் நிலை தொடர்கதையாகி வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேங்கியுள்ள நீரை மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றவும், அடைபட்டுள்ள வடிகால்களைச் சீரமைக்கவும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. தென்மேற்குப் பருவமழை மற்றும் வெப்பச்சலனத்தால் தென்காசி மாவட்டத்தில் வரும் நாட்களிலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று சேத விபரங்களைக் கணக்கெடுத்து வருகின்றனர்.

















