சென்னை :
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அந்த பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் (செவ்வாய்க்கிழமை) கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 29 சென்டிமீட்டர் மற்றும் கோவை சின்ன கல்லாரில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.