தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 4ஆம் தேதி வரை தமிழகத்திலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை தொடர்ச்சியாக பெய்யக்கூடும். சில இடங்களில் பலத்த தரைக்காற்றும் வீச வாய்ப்பு உள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2–3° செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35–36° செல்சியஸ், குறைந்தபட்சம் 27–28° செல்சியஸ் வரை இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல், குஜராத் முதல் கேரளா கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45–55 கிலோமீட்டர் வேகத்தில், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்பு உள்ளது.
அதேபோல், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், வடக்கு ஆந்திரம் மற்றும் வங்கக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும்.
இதனால், மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.