எஸ்ஐஆர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியாது என்றும், நேருவும், இந்திராவும் தான் வாக்குத்திருட்டை அறிமுகப்படுத்தியதாகவும், மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அவரது பேச்சை கண்டித்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தின்போது விளக்கமளித்து பேசினார்.
அப்போது, எஸ்.ஐ.ஆர். தொடர்பான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக இல்லை என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், ஆனால், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, விவாதத்தில் இருந்து ஒருபோதும் விலகவில்லை என்றும் அமித்ஷா கூறினார்.
அரசியல் சாசனச் சட்டத்தின் பிரிவு 326-ன் கீழ் தெளிவான வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கு, எஸ்.ஐ.ஆர். பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது என்றும், இந்தியாவில் சட்டவிரோத குடியேறிகள் வாக்கு பதிவில் ஈடுபட வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
வாக்காளர் பட்டியல் சீர்திருத்தமே எஸ்ஐஆர் என்றும், மக்கள் நலன் சார்ந்த இப்பணியை எதிர்க்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தேர்தலில் தோல்வியே அடையும் என்றும் அமித்ஷா கூறினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
















