மயிலாடுதுறை நகராட்சி 30-வது வார்டில் சுற்றித்திரியும் 500-க்கு மேற்பட்ட பன்றிகளால் சுகாதார சீர்கேடு:- நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி 30-வது வார்டு எரகலித் தெருவில் 800-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இங்கு குறிப்பாக தூர்க்கணாங்குளம் பகுதிகளில் பன்றிகளின் நடமாட்டம் கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கு கடும் இடையூறாக விளங்குகிறது. இங்கு சந்திரநாயக் என்பவர் 500-க்கு மேற்பட்ட பன்றிகளை பராமரித்து வருவதுடன், அதே பகுதியில் பன்றி இறைச்சி கடையும் நடத்தி வருவதாகவும், பகல் நேரத்தில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படும் பன்றிகள் பலர் வீடுகளுக்குள் புகுந்து அசுத்தம் செய்வதுடன், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் விளங்குவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் பலர் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள் மேலும், பன்றிகள் ஒன்றோரொன்று சண்டையிட்டுக் கொண்டு சாலையில் குறுக்கிடுவதால் விபத்துகள் நேரிடுவதாகவும் பன்றி இறைச்சிக் கடையில் இறைச்சிக்காக பன்றிகள் அடித்துக் கொல்லப்படும் எழும் சத்தத்தால் குழந்தைகள் கடும் அச்சம் அடைவதாக தெரிவிக்கும் பொதுமக்கள் இதுகுறித்து நகராட்சிகளின் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கு புகார் கடிதம் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தருவில் குவிந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்து முழக்கமிட்டனர். பன்றி வளர்ப்பாளர்கள் புகார் அளித்தவர்களை மிரட்டுவதாகவும் உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள பன்றி கொட்டகையை அங்கிருந்து அகற்றி, தங்கள் பகுதியை சுகாதாரமானதாக மாற்றித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
