சென்னை:
திமுகவை “தீய சக்தி” என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், அதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுக பதிலடி அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், விஜயின் சமீபத்திய அரசியல் பேச்சுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய் இதுவரை பத்திரிகையாளர்களை சந்தித்தது உண்டா? அவரை பேசவிட்டு பாருங்கள்… அப்போது எல்லாம் தெரியும்” என தெரிவித்தார்.
விஜயின் கடும் விமர்சனம்
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், திமுகவை தொடர்ந்து “தீய சக்தி” என குறிப்பிட்டார்.
“எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் பேசி திமுகவை எதிர்த்தார்கள். அப்போது ஏன் இப்படி பேசினார்கள் என்று புரியவில்லை. இப்போது அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்” என கூறிய விஜய், “திமுக ஒரு தீய சக்தி; தவெக ஒரு தூய சக்தி” என்று வலியுறுத்தினார்.
மேலும், அரசியல் களத்தில் உள்ளவர்களையே மட்டுமே எதிர்ப்போம் என்றும், களத்தில் இல்லாதவர்களை எதிர்க்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு
விஜய் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றியதும், அவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. அதிமுகவின் பாரம்பரிய அரசியல் இடத்தை நோக்கி, “திமுக vs தவெக” என்ற நேரடி போட்டி சூழலை விஜய் உருவாக்கி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், திமுக இளைஞரணியின் அடுத்த மண்டல மாநாடு குறித்து பேசும்போது, அதன் தேதியை கட்சித் தலைவர் முடிவு செய்வார் என்று உதயநிதி தெரிவித்தார். தொடர்ந்து விஜயின் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுந்தபோது, “விஜயிடம் இதுபோன்ற கேள்விகளை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என பதிலளித்தார்.
தவெக தொடங்கப்பட்டதிலிருந்து, விஜய் இதுவரை நேரடியாக பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்பதே உதயநிதியின் கருத்தின் பின்னணி என பார்க்கப்படுகிறது. இதன் மூலம், விஜயை மறைமுகமாக சீண்டும் வகையில் அவர் கருத்து தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்குப் பதிலாக தவெக தலைவர் விஜய் என்ன பதிலடி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.

















