எடப்பாடி மீது கடும் விமர்சனம் – ” 2,000 கொடுத்தாலும் 2026ல் ஜெயிக்க முடியாது” : கருணாஸ்

எடப்பாடி பழனிசாமிக்கு விசுவாசம் என்பதே தெரியாது, அவர் சுயநல அரசியலால் அதிமுக படுகுழியில் தள்ளப்படுவதாக, நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வெளிநாடுகளில் தொழில் முதலீட்டாக ₹15,516 கோடி ஈர்த்து, 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகுத்துள்ளார். இது பாராட்டப்பட வேண்டிய செயல். முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார்.

அதிமுக – பாஜக கூட்டணியை குறிவைத்து அவர்,
“2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடி பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. பாஜகவின் தமிழர் விரோத முகத்திரையை வெளிக்கொணர நான் 400 பக்க புத்தகம் எழுதியுள்ளேன். கீழடி, விவசாயம், நீட் உள்ளிட்ட பிரச்சனைகளில் பாஜக மக்களுக்கு எதிராக செயல்பட்டதை எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் எழுதியுள்ளேன். விரைவில் முதல்வர் ஸ்டாலின் அந்த புத்தகத்தை வெளியிடுவார்,” என்றார்.

எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கிய கருணாஸ்,
“புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா உருவாக்கிய எஃகுக் கோட்டையான அதிமுகவை, எடப்பாடி சுயநலத்திற்காக குழி தோண்டி புதைத்து வருகிறார். அதிமுகவை அழிக்க வெளியில் யாரும் தேவையில்லை; எடப்பாடியே அழிப்பார். வரும் தேர்தலில் 2000 ரூபாய் கொடுத்தாலும் அவர் வெற்றிபெற முடியாது. செங்கோட்டையனை நீக்கியது கொங்கு மண்டல மக்களை கடுமையாக பாதித்துள்ளது. நன்றி, விசுவாசம், உண்மை எதுவும் எடப்பாடியிடம் எதிர்பார்க்க முடியாது. மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள்,” என்று கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்த அவர்,
“உடைந்த கண்ணாடி உடைந்ததே; மீண்டும் ஒட்டாது. நான் எந்த நிலையிலும் அதிமுக கூட்டணியில் போட்டியிட மாட்டேன். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்தேன். பாஜக பாசிச ஆட்சி வரக்கூடாது என்பதற்காக தீவிரமாக செயல்பட்டேன். இந்த தேர்தலிலும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதால் பிரச்சாரம் மேற்கொள்வேன். வாய்ப்பு கிடைத்தால் எந்தத் தொகுதியிலும் திமுக சார்பில் போட்டியிட தயாராக உள்ளேன்,” என்றார்.

நடிகர் விஜயின் அரசியல் குறித்து அவர்,
“அவர் பிரபல நடிகர். கூட்டம் வராமல் இருக்குமா? ஆனால், பேஸ்புக், வாட்ஸ்அப்பிலேயே அரசியல் செய்ய முடியாது,” என்றும் கூறினார்.

இறுதியாக அவர்,
“எடப்பாடியின் அரசியல் சுயநலத்திற்காகத்தான். மரியாதை இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன். கொங்கு மண்டலத்தில் நேற்று போலவே இன்றும் எடப்பாடிக்கு எதிராகவே இருப்பேன்,” என்று வலியுறுத்தினார்.

Exit mobile version