முன்னாள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “விண்வெளிக்கு முதலில் சென்றவர் ஹனுமான்” எனக் கூறியதனால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிஎம் ஶ்ரீ பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அனுராக் தாக்கூர், மாணவர்களிடம் “விண்வெளிக்கு முதலில் சென்றவர் யார்?” எனக் கேட்டார். அதற்கு மாணவர்கள் ஒருமித்த குரலில் “நீல் ஆம்ஸ்ட்ராங்” என பதிலளித்தனர். ஆனால் அதற்கு பதிலாக அனுராக் தாக்கூர், “ஹனுமனாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்” என்று கூறியதால் அதிர்ச்சி ஏற்பட்டது.
உண்மையில், 1961-ஆம் ஆண்டு சோவியத் விண்வெளி வீரர் யூரி காகரின் விண்வெளிக்குச் சென்று பூமியைச் சுற்றிவந்தார். பின்னர், 1969-இல் அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்த முதல் மனிதராக வரலாற்றில் பெயர் பெற்றார். இருந்தும், மாணவர்களின் தவறான பதிலைச் சரிசெய்யாமல், புராணக் கதையை வரலாறாகக் கூறியதற்காக அனுராக் தாக்கூர் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
அரசியலமைப்பின் பிரிவு 51 A (h) அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதை மீறுவதாகவே அவரது கூற்று பல்வேறு தரப்பினரால் சாடப்படுகிறது.
தனது கருத்தை விளக்கிய அனுராக் தாக்கூர், “ஹனுமான் பற்றிய இந்தக் கதை நமது பாரம்பரியம், அறிவு, கலாசாரம் எவ்வளவு ஆழமானவை என்பதை காட்டுகிறது. நாம் பிரிட்டிஷ் கற்றுத் தந்தவற்றிலேயே சிக்கிக்கொள்ளாமல், நம் தேசத்தின் பாரம்பரியத்தையும் அறிவையும் புரிந்து கொள்ள வேண்டும். பாடநூல்களுக்கு வெளியே சிந்தியுங்கள்” எனக் கூறினார்.
சந்திரயான்-3 விண்கலம் 2023 ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதையடுத்து, அந்த நாளை “தேசிய விண்வெளி தினம்” எனக் கொண்டாடி வரும் நிலையில், அனுராக் தாக்கூரின் இந்தப் புதிய கருத்து அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.