திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் குருபூஜைவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10-ம்நாளான இன்று முக்கிய நிகழ்வான பட்டிணப்பிரவேசம் நடைபெற்றது.
இதையொட்டி, திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்,கோமுக்தீஸ்வரர் கோயிலில் தரிசனம் மேற்கொண்டு, நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
இதையடுத்து, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளாலான தலைவடம் அணிந்து, பவளமணி,கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து, சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார்.
வானவேடிக்கை விண்ணை பிளக்க பக்தர்கள் பல்லக்கை சுமந்து செல்ல, ஆதீனம் நான்குவீதிகளிலும் உலா செல்லும் பட்டினப் பிரவேசம் நடைபெற்றது. வழியெங்கும் ஆதீனத்துக்கு பக்தர்கள் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். நிறைவாக, திருமடத்தின் கொலு மண்டபத்தில் சிவஞானக் கொலுக்காட்சியில் எழுந்தருளினார்.














