சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு குஜராத் மாநிலத்திலிருந்து ஆசிய சிங்கங்களை வழங்க அங்குள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல்வேறு வகை வனவிலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. ஆனால், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு இருந்த ஆசிய சிங்கம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. இதையடுத்து, புதிய ஆசிய சிங்கங்களை கொண்டு வர பூங்கா நிர்வாகம் தொடர்ந்து முயற்சித்து வந்தது.
இந்த நிலையில், குஜராத்தின் ஜூனாகட் நகரில் உள்ள சக்கார்பாக் விலங்கியல் பூங்கா, ஒரு ஆண் சிங்கம், இரண்டு பெண் சிங்கங்கள் மற்றும் ஒரு பெண் காட்டுக்கழுதை ஆகியவற்றை தேசிய விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் வண்டலூர் பூங்காவுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
மாறாக, வண்டலூர் உயிரியல் பூங்கா இந்திய காட்டெருமை, வெள்ளை புலிகள் ஜோடி, சறுகு மான், வெள்ளை மயில் மற்றும் மஞ்சள் அனகொண்டா ஆகியவற்றை குஜராத்திற்கு அனுப்ப உள்ளது.
இது குறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்ததாவது :
“எங்களிடம் தற்போது 4 ஆண் சிங்கங்களும் 5 பெண் சிங்கங்களும் உள்ளன. ஆனால் அவை தூய இனத்தைச் சேர்ந்தவை அல்ல. குஜராத்திலிருந்து ஆசிய சிங்கங்களைப் பெறுவது, தனித்துவமான மரபணு தொகுப்பை உருவாக்க எங்களுக்கு உதவும்,” என்றனர்.