திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே விருவீடு சாலையில் மண் ஏற்றிச் சென்ற அதிவேக டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் பரிதாபமாக உயிரிழந்தனர். வத்தலக்குண்டு அடுத்த விருவீடு அருகே தெப்பத்துப்பட்டியைச் சேர்ந்த விவசாயி காத்தவராயன் (65). இவர் தனது மனைவி ஜோதி (60), பேரன் ஆச்சிபாண்டி (11), பேத்தி ஆச்சியம்மாள் (9) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் விருவீடு சென்றுள்ளார். இவர்கள் விருவீட்டில் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டு, மீண்டும் வத்தலக்குண்டு சாலையில் தெப்பத்துப்பட்டி நோக்கித் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, வத்தலக்குண்டு பகுதியிலிருந்து விருவீடு நோக்கிச் செம்மண் ஏற்றிக்கொண்டு அதி வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்தக் கோர விபத்தில், குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். தாத்தா காத்தவராயன் மற்றும் பேத்தி ஆச்சியம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியானார்கள். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பலி: படுகாயம் அடைந்த பாட்டி ஜோதி மற்றும் பேரன் ஆச்சிபாண்டி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், பாட்டி ஜோதி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த பேரன் ஆச்சிபாண்டிக்கு, வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் பரிமளா, விருவீடு சப் இன்ஸ்பெக்டர் வாணி மற்றும் போலீசார், பலியான காத்தவராயன் மற்றும் ஆச்சியம்மாள் ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய டிப்பர் லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டி, பேத்தி ஆகியோர் மண் ஏற்றிச் சென்ற லாரி மோதி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. விருவீடு போன்ற கிராமப்புறச் சாலைகளில் மண் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள் விபத்துக்களை ஏற்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.கிராமப்புறச் சாலைகளில் கனரக வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், விதிகளை மீறும் வாகனங்களை உடனடியாகப் பறிமுதல் செய்யவும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினரும், காவல்துறையினரும் இணைந்து தீவிரச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

















