சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்காமல், அதனை புறக்கணிக்க இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாளை (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி உரையாற்ற உள்ளார். அதேபோல், சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசுத் தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்து, தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பியுள்ளார்.
ஆனால், தமிழக நலனுக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாகவும் ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி, இந்த விருந்தை பல கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவை வேண்டுமென்றே காலதாமதப்படுத்தி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நடவடிக்கையை கண்டித்தும், தமிழ்நாடு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு அறிவித்துள்ளன.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் தமிழக நலன்களுக்கு எதிரானவை என்பதால், சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

















