தஞ்சாவூர் :
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்கும் தமிழக அரசு, விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி தவிக்கும் நிலையை புறக்கணிப்பதாக பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி கடுமையாக சாடியுள்ளார்.
கும்பகோணம் அருகிலுள்ள அம்மன்குடி பகுதியில் சமீபத்திய மழையால் சேதமடைந்த வயல்வெளிகளை அவர் நேரில் பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது நிலைமையை கூறி வேதனை தெரிவித்தனர். நடவு செய்து ஒரு மாதமே ஆன நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகி வீணானதை அவர்கள் காட்டினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி, “காலநிலை மாற்றத்தால் இன்னும் பல இடங்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக வடிகால் வசதிகளை சீரமைக்க வேண்டும். அரசு தூர்வாரும் பணி முடிந்துவிட்டதாகச் சொல்லினும், நிஜத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. மழை நீர் வயல்களில் தேங்கி நிற்கும் நிலையே அதற்கு சாட்சி,” என்று கூறினார்.
அவர் மேலும், “கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு உடனே நிவாரணம் அறிவிக்கிறது. ஆனால் நமக்குச் சோறு போடும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏன்? விவசாயிகள் கத்தி கதறும் வரை அரசு காத்திருக்கிறது,” என்று விமர்சித்தார்.
மேலும், “டாஸ்மாக் கடைகளுக்கு கேமரா, போலீஸ் பாதுகாப்பு அனைத்தும் இருக்கிறது. ஆனால் நெல் கொள்முதல் நிலையங்கள் மழையில் நனைந்து மட்கும் திறந்த வெளிக் கிடங்குகளாகவே உள்ளன. மழையால் முளைத்துப் போகும் நெற்கள் வீணாகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்,” என்று சௌமியா அன்புமணி வலியுறுத்தினார்.

















