வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த 40 நாட்களாக நீடித்து வரும் அரசு நிர்வாக முடக்கம் விரைவில் தீர்க்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நிதி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாததால், அமெரிக்க அரசின் பல துறைகள் முடங்கியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் சம்பளமின்றி கட்டாய விடுப்பில் உள்ளனர். அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் நிலையில், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரசு முடக்கத்தை நிறுத்தும் நோக்கில் அமெரிக்க செனட் சபையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ஜனவரி 30ஆம் தேதி வரை அரசுக்கு இடைக்கால நிதி வழங்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் எட்டு உறுப்பினர்கள் ஆதரவளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீர்மானம் விரைவில் செனட் சபையில் வாக்கெடுப்பிற்கு வர உள்ளது.
இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “அரசு முடக்கம் விரைவில் முடிவடையும் என நம்புகிறேன். தேவையான ஒத்துழைப்பை அனைவரும் வழங்குவார்கள்,” என தெரிவித்தார்.
அவரது இந்த கருத்துக்கு பிறகு, அரசு இயங்கும் சேவைகள் மீண்டும் வழக்குநிலைக்கு திரும்பும் என அமெரிக்க மக்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

















