பாஜகவின் முன்னாள் தமிழகத் தலைவர் அண்ணாமலை, சமூக வலைதள பதிவுகளை காரணமாக்கி பாஜகவினரை கைது செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்து, “ஆட்சி, அதிகாரம் நிரந்தரமல்ல” என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக வலைத்தளப் பதிவின் அடிப்படையில் பாஜகவைச் சேர்ந்த பிரவீண் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டிக்கிறேன். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், முதியோர்களின் கொலைகள் என அநேக சட்ட ஒழுங்கு சிக்கல்கள் உள்ளன. ஆனால் இவற்றை தவிர்த்து, போலீசாரை சமூக வலைதளங்களை கண்காணிக்க மட்டும் பயன்படுத்துவது தவறானது” என்று கூறியுள்ளார்.
“தி.மு.க.வினர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்களை விமர்சிக்கும்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் ஸ்டாலின் தலைமையிலான அரசு, பாஜகவினரின் சாதாரண சமூக வலைதளப் பதிவுகளுக்காகக் கைது செய்வது சிறுபிள்ளைத்தனமாகும். ஆட்சி, அதிகாரம் என்றும் நிலைத்திருக்காது என்பதை முதல்வர் நினைவில் கொள்ள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பலத்த பேசுபொருளாகி உள்ளது.