பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில், கபடியில் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் வெல்ல முக்கிய பங்காற்றியவர் சென்னை கண்ணகி நகர் வீராங்கனை கார்த்திகா. அவரது அபார சாதனைக்கு அரசு சார்பில் ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கார்த்திகாவின் ஊரான கண்ணகி நகரில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த மைதானம் குறித்து தமிழக துணை முதல்வரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழை, வெயில் பற்றி கவலைப்படாமல் கபடி வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சி பெறும் வகையில் அமைக்கப்படும் இந்த மைதானம், எதிர்காலத்தில் கார்த்திகா போன்ற பல திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் என அவர் தெரிவித்தார்.
அவர் தனது சமூக வலைதள பதிவில், “கபடி வீராங்கனை கார்த்திகாவின் சாதனையால் கண்ணகி நகர் இன்று முழு தமிழகத்துக்கும் பெருமையாகியுள்ளது. அங்கு நடைபெறும் ரூ.40 லட்சம் மதிப்பிலான உள்ளரங்க கபடி மைதானப் பணிகளை ஆய்வு செய்தேன். இது, விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்குப் பெரிய பங்களிப்பாக இருக்கும்” எனக் குறிப்பிட்டார்.
இதனுடன், கண்ணகி நகரில் ஒக்கியம் மடுவின் இடதுபுறத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளையும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் இருந்து வெள்ளநீரை பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலுக்கு தடை இல்லாமல் செல்லச் செய்யும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூர் அருகே ரூ.42 கோடி மதிப்பில், 1.7 கிலோமீட்டர் நீளத்திற்கு இரண்டு கண்கள் கொண்ட மூடு கால்வாய் அமைக்கும் பணிகளின் முன்னேற்றத்தையும் அவர் ஆய்வு செய்தார்.
அதேபோல், சோழிங்கநல்லூர் – மேடவாக்கம் பகுதிகளை இணைக்கும் புதிய உயர் மட்ட பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. பழைய பாலத்தை இடித்து, மழைக்காலத்தில் நீர் தேக்கம் இல்லாமல் உறுதி செய்யும் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

















